dfஅரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் கூட முன்னேற்றம் காண முடியாதுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்க்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநி மு. மக்கோலின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங்லாய் மார்க் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு முதல்வர், நல்லிணக்கம் தொடர்பாக பலவித செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எந்தவகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சென்றடைகின்றன என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். காணாமல் போனோரின் அலுவலகத்தினை அமைப்பது தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவற்றை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். அரசியல் ரீதியாக பல விடயங்களை முன்னெடுத்தாலும், அவற்றில் முன்னேற்றம் காணமுடியாதுள்ளது.

அரசாங்கத்திற்குள்ள கட்டுப்பாடுகளை எனக்கு விளங்கப்படுத்தினார்கள். அவற்றினை நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால், 69 வருடகாலமாக தீர்க்கப்படாத விடயங்களை இனியும் தீர்க்காமல் இருந்தால், மக்கள் வேதனைப்படுவதுடன், பிரச்சினைகளும் அதிகரிக்கும். தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் எம்முடன் இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே வலியுறுத்தி வருகின்றோம்.

வடமாகாண மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது தமக்கு ஆதரவினை தருமாறும் கேட்டிருந்தார்கள். அதற்கு முழுமையான ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளேன். வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபர் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையிலும், கொள்கை ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.