gfgfமன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மன்னார் மாவட்ட நீதவான், நீதிமன்ற நீதிபதி ஏ.சி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களைப் பகுப்பாய்விற்கு உட்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் 7ஆம் திகதி இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதியின் உத்தரவிற்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு தடயவியல் நிபுணத்துவ நிறுவனமொன்றுக்கு, எச்சங்கள் தொடர்பில் பகுப்பாய்வுகளை முன்னெடுப்பதற்கான உதவிகோரி அனுப்பிய மின்னஞ்சல் குறித்து காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

எனினும், தடயவியல் நிறுவனத்திற்கு தாம் அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். எவ்வாறாயினும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கூற்றை நிராகரித்த சட்டத்தரணிகள், மார்ச் மாதமளவில் பகுப்பாய்விற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தடயவியல் நிறுவனம் பதில் மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

மனுதாரர் தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதிபதி, திருக்கேதீஸ்வரம் மனித எச்சங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், மனித எச்சங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான படிமுறைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.