image-0-02-06-2385f724d2c740cfce9625aead960254300b0a838300909c99e65bf2402899fc-Vமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் நேற்று 15.02.2017 புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இக்கூட்டத்தின்போது கிராம மக்களினால் கிராமத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றில் மிக முக்கியமான விடயமாக குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இம் மக்களின் பாரிய பிரச்சினையாக குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்றமை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. வறட்சி காலங்களில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாலும், சுத்தமற்ற குடிநீரைப் பருகுவதால் பலவிதமான தொற்றுநோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் இதன்போது குறிப்பிட்டதுடன், இப்பிரச்சினைகளை பலரிடம் கூறியும் அதற்கான தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் வேதனையுடன் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்கள், தேசிய நீர்வழங்கல் அமைச்சு சபை நிலையப் பொறுப்பதிகாரி மாமாங்கம் விக்னேஸ்வரன் அவர்களுடன் உடன் தொடர்புகொண்டு அவர்களையும் அன்புடன் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து நீர் வழங்கல் விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.

இதன்போது ஆயித்தியமலையைச் சேர்ந்த 90 குடும்பங்களுக்கு மிக விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனவும் இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் உன்னிச்சை தொடக்கம் கரடியனாறு தொடர்பான பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் அமைச்சு சபை நிலையப் பொறுப்பதிகாரியினால் கூறப்பட்டது.

மேலும் ஆயித்தியமலைப் பகுதியிலுள்ள வீதிகள் கடந்தகால வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாங்கள் இவ் வீதியினூடான பயணம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் மக்கள் கூறினார்கள். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விரைவில் இவ் வீதிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கூட்டத்தில் பேசிய கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், இக்கிராமத்தில் பல இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்மையால் சிரமப்படுவதாகக் கூறினார். இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்கள், தன்னால் முடிந்தளவில் இவர்களுக்கான தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும், இளைஞர் யுவதிகள் சுயதொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தொலைபேசி திருத்தும் பயிற்சிநெறி, சிகையலங்காரம் போன்ற சுயதொழில்சார் இலவசக் கற்கைநெறிகளை விரைவில் ஆயித்தியமலை பகுதியில் தொடங்கவுள்ளதாகவும், இதன்மூலம் இளைஞர், யுவதிகள் தமது பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியை அடைய முடியுமெனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய கிராம அபிவிருத்தி சங்கப் பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்களால் ஆயித்தியமலை உன்னிச்சை பாடசாலைகளை இணைத்து இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலையில் நடைபெறும் மேலதிக இலவச வகுப்புக்கள் திறன்பட நடைபெறுவதாகவும், இவ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தங்களது பிள்ளைகள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும், தற்போது மாணவர்களுடைய அடைவு மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இம் மேலதிக வகுப்பு செயற்றிட்டத்தினை ஆரம்பித்து நடாத்திக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்களுக்கு தமது கிராம மக்கள் சார்பாக தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இந் நிகழ்வில் ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர்கள், பாடசாலை அதிபர், அமைப்புக்களின் நிருவாகத்தினர், கிராம மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஆயித்தியமலை இணைப்பாளர் நிறோராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

image-0-02-06-7c1b317d51015998eb1b94f577956cc4991a76c8651e1a053c10999432b23390-V image-0-02-06-38ff129267bbd7c0d0ce22b0663e5a0531bf13b2b552af8d587e4271d3547066-V image-0-02-06-75e325b8936dac899aaf908bb31781824916e795ce297912e98d0ae1da65878b-V image-0-02-06-27251cb0d945a5ce8f08828573f76b843daa82b2cc52637e5f1a96625cc65eda-V image-0-02-06-a1c7b0ef331ed9e0bde94c7165d1901a8120a6d23a7834e330925a877f1978ef-V image-0-02-06-a27b63a8e70bc1fbd6ec76c5fb59407c82b5a61d0b7b9d7e11d29b63d2f5756f-V