தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19-1/4 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு இன்றுமுற்பகல் நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கருத்துக் கூறிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மக்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தங்கள் போராட்டத்தினை தற்போது விரிவுபடுத்தியிருக்கின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். மேற்படி 19-1/4 ஏக்கர் காணியிலே அரசாங்க அதிபரினுடைய அறிவித்தலின்படி அதில் 7ஏக்கர் காணி அரசாங்கத்தினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த மக்களின் காணியை அவர்களுக்குத் தெரியாமல் சுவீகரிப்பு செய்யமுடியாது. மக்களுக்கு தெரியாமல் காணி சுவீகரிப்பு செய்திருந்தால் அது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கை. அந்தக் காணிகளுக்கான உறுதிகள் அந்த மக்களிடம் இருக்கின்றன. அவர்கள் அதற்காக எந்த ஒரு இழப்பீடும் இதுவரையில் பெற்றது கிடையாது. மேற்படி ஏழு ஏக்கர் காணி சுவீகரிப்பினை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் கிடையாது. ஆனால் அந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வந்திருப்பதாக அரசாங்க அதிபர் வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.
மிகுதியாகவிருக்கும் 10 ஏக்கர் காணியானது தனிநபர் ஒருவரின் பெயரிலே உள்ளது. அந்தக் காணியில் அவரது உறவினர்களின் பிள்ளைகள்தான் குடியிருந்தார்கள். ஆகவே, அதற்கு ஆவணம் இல்லையென்று கூறுவதை ஏற்க முடியாது. அந்தக் காணி தனிநபர் ஒருவருடைய பெயரில் இருந்தாலும் அவரது சந்ததியினர் அங்கு இருப்பதை தவறென்று எவரும் கூறமுடியாது.
இந்தக் காணிகளுக்கு ஆவணங்கள் கைதவறிப் போனதே தவிர ஆவணம் இல்லையென்று கூறுவது தவறு. அவற்றுக்கான ஆவணங்கள் அவர்களின் கைகளில் இருந்தன. அவற்றில் சிலபேரிடம் காணிகளுக்கான உறுதி இருந்தது. சிலபேரின் காணிகளுக்கு நில அனுமதிப் பத்திரம் இருந்துள்ளன. யுத்த இடம்பெயர்வுகள் காரணமாக அவை தவறவிடப்பட்டிருக்கலாமேயொழிய அவர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரணங்கள், அடையாளங்கள் அங்கு இருக்கின்றன. அவற்றுக்கு அரசாங்க அதிபர், உதவி அராங்க அதிபர் மற்றும் கிராம சேவகர்களுடைய ஆதாரபூர்வமான தகவல்களும் நிச்சயமாக இருக்கின்றன.
அடுத்தது வைத்தியசாலை இருந்த 2ஏக்கர் காணியாகும். அதாவது பொன்னம்பலம் வைத்தியசாலை இருந்த பகுதி. ஏற்கனவே அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வைத்தியசாலையாகும். அந்த 2 ஏக்கரும் ஒரு தனியாருக்குரிய காணி. அந்தக் காணியும் விடுவிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல, ஏனைய முல்லைத்தீவுpல் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்,
அதுபோல் வட்டுவாகலில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். கொக்குளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் இருக்கக்கூடிய பெருந்தொகையான காணிகள்; இன்னமும் உரியமுறையில் கையளிக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல தனியார் காணிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள்கூட அரங்கேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக நிச்சயமாக நாம் ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேசி அவற்றை விடுவிப்பதற்கான அழுத்தங்களை தொடர்ந்து கொடுப்போம் என்று தெரிவித்தார்.