palanisamyதமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை 4.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இரண்டு மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஓபிஎஸ் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக குரல் எழுப்பியிருந்தார். இதனால் தமக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தேவை என ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 14ம் திகதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.