கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை, தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது.தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருவோரையும் தங்களையும் விமானப்படையினர் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று குறித்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி 18வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இந்த மக்கள் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காவிடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் இன்று விமானப்படையினர் மேற்படி எச்சரிக்கை அறிவித்தலை காட்சிப்படுத்தியுள்ளனர்.