sureshஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் 18 மாதகால அவகாசத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை நீர்த்துப்போன பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது. கால அவகாசத்திற்கான சம்மதம் தெரிவிக்க வேண்டி ஏற்படின் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்து அந்த நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டால், கால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். கால நீடிப்பு அங்கீகரிக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் மிக அருகில் இருந்து கண்காணிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள சம்பந்தனின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுகிறது.

கால அவகாசங்கள் நீடிக்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஐ.நா பொதுச் சபைக்கு விசாரணைகளை கையளிக்க வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடன் கலந்துரையாடி கால அவகாசத்தினை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.