கிளிநொச்சி வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிப்பதில் 10 வருடங்களாக, அதிகாரிகள் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருவதாக, கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த மருத்துவமனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய மருத்துவர் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து, கடந்த 10 வருடங்களாக, நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள், தங்கள் மருத்துவ தேவைகளுக்கு அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. வாரத்தில் இருநாட்கள் அக்கராயன் மருத்துவர்கள் வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு வருகின்ற போதிலும், போக்குவரத்து வசதிகள் அற்ற வன்னேரிக்குளம் கிராமத்தில் இருந்து, அவசர நோயாளர்கள் உயிராபத்தான நிலையிலேயே அக்கராயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
மகப்பேறுகள் இடைவழியில் நிகழ்ந்துள்ளன. இந் நிலையில், வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறும், தமது கிராமத்துக்கான ஒழுங்கான வீதி வசதிகள் மற்றும் பஸ் வசதிகள் இல்லாத நிலையில், உயிராபத்தான நோய்கள் ஏற்படும்போது, பெரும் அவலங்களை எதிர்கொள்வதாகவும், வன்னேரிக்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.