மட்டக்களப்பு மாவட்ட தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நேற்றுக்காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சாத்தவீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடத்திவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 1600ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது நியாயமான கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள குறித்த பட்டதாரிகள் தேர்தல் காலங்கள் வரும்போது மட்டும் தங்களை நாடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்தலத்திற்கு உடன் சென்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார். அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தெரிவித்தார்.