dffffffffffffநில ஆக்கிரமிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், யாழ். மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்றுகாலை 10.00 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் மிக ஆக்ரோசமாக தமது கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்தனர். நல்லாட்சி அரசாங்கமே கேப்பாபுலவில் நில ஆக்கிரமிப்பினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் காணிகளை மீளக் கையளி, வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் கூறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டவர்கள், யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக ஏ9 வீதியை அடைந்து அங்கிருந்து யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தார்கள். போராட்டத்தின் நிறைவில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்குமாறு மகஜர் ஒன்றையும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரனிடம் கையளித்தார்கள்.