ddddfffffகிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வெற்றிடங்களுக்கு அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பட்டதாரிகளை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் நான்கு, ஐந்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பயின்று வெளியேறுகின்றனர். இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றில் வேலைவாய்ப்புக்காக போட்டிப் பரீட்சை நடத்தினாலும் ஆசிரியர்களுக்கான நியமனம், முகாமைத்துவ உதவியாளர் நியமனம் உள்ளிட்ட அரசாங்க நியமனங்களுக்கு போட்டிப் பரீட்சை நடத்தப்படக்கூடாது. மேலும், கடந்த அரசாங்கமானது வேலையற்ற பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி நேர்முகப் பரீட்சையின் மூலம் நியமனங்களை வழங்கி, ஒரு வருட பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கியது. இந்த நடைமுறையை நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்ற வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்களிலும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

இந்த வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமித்த பின்னர் மேலதிகமாக உள்ள வெற்றிடங்களுக்கு க.பொ.த சாதாரணம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களை நியமிக்கலாம். இம்மாகாணத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக இம்மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

dddddd ddddeeee