bavanகௌரவ முதலமைச்சர்,
வடக்கு மாகாணசபை
கைதடி, யாழ்ப்பாணம்

20.02.2017
கனம் ஐயா,
தொடர்ச்சியாக வடமாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், அவற்றை நிவர்த்திசெய்யக் கூடிய நடைமுறைச் சாத்தியமான, யாழ் மாவட்டம் தவிர்ந்த, ஏனைய பின்தங்கிய மாவட்டங்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றியும், நாம் பல தடவைகள் பல நிர்வாக, அரசியல் தலைமை மட்டங்களிலும் வலியுறுத்தி வந்த போதிலும் அவை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலவே அமைகின்றது.

அண்மையில் வட மாகாண ஆசிரிய சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் பற்றி நிறையவே சந்தேகங்கள் பல மட்டத்திலும் ஏற்றபட்ட வண்ணமேயுள்ளது.

2300 விண்ணப்பதாரிகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றி, பின் பரீட்சை முடிவுகளின் படி, அண்ணளவாக சுமார் 800 பேர் வரையிலான பட்டதாரிகள், ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். அதாவது ஏனையவர்கள் சித்தியடையவில்லை என்று கருத்திலெடுக்கப்படுகின்றது.

வித்தியாசமான பாடவிதானத்துடன், தேவைக்கு மேலான இறுக்கமான, நடைமுறைக்கு பொருத்தமில்லாதபரீட்சை ஒன்றின் மூலம், நான்கு ஐந்து வருடகல்விக்கு பின்னர், பல்கலைகழகத்தால் பட்டதாரிகள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள் தொழில்சந்தைக்கு தகுதியற்றவர்கள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப் பட்டதாரிகள் தத்தமது பெயருடன் வைத்திருக்கும் சான்றிதழ்களினதும், பல்கலைக்கழக பாடவிதான செயற்பாடுகளினதும் தகுதியையும் தரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இச் செயற்பாட்டினது விளைவுகளையும் நோக்கங்களையும் வெளிப்படையாக கூற யாரவது தயாராக உள்ளனரா?

குறிப்பிட்ட பாடத்தில் கல்விகற்று பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகள், சம்பந்தமில்லாத துறைகள் சார்ந்த கேள்விகளால் பரீட்சிப்பது பொருத்தமான செயற்பாடாக தெரியவில்லை. அதே நேரத்தில் மிகவும் இறுக்கமான பரீட்சை முறைகளின் மூலமும், பொதுவான வெட்டுப்புள்ளி முறைகளின் மூலமும் பின்தங்கிய மாவட்டத்தின் சேவைகளை பூர்த்தியாக்க முடியாத இலக்கு என்பதுமா இவர்களிற்கு புரியாமலுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பக்கூடிய வகையில் வெட்டுப்புள்ளியை தீர்மானிப்பதிலும், சம்பந்தபட்ட மாவட்ட பரீட்சார்த்திகளில் சிறப்பான பரீட்சைமுடிவுகளை வெளிக்காட்டுபவர்களை கொண்டு வெற்றிடங்களை நிரப்பவும் விரும்பாது

மாகாண கல்வித்துறை தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது.
மாவட்ட ரீதியாக வெட்டுபுள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு, ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தெரிவுசெய்யப்படுபவர்கள்

1. நீண்ட காலத்திற்கு தனது சேவையை சம்பந்தபட்ட மாவட்டத்திற்கு அளிக்கமுடியும்.
2. இடமாற்றத்திற்கு அக்கறை கொண்டு ஓடித்திரியும் நிலை ஏற்படாது.
3. இடமாற்றப் பிரச்சினைகள் ஓரளவுக்கு கட்டுக்கோப்பான நிலைக்கு வரும்.
4. போக்குவரத்து – பிரயாண நேரமும் செலவும் தவிர்க்கப்படும்
5. சமுகத்துடனான உறவும் மேம்படும்

நடந்து முடிந்த பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் 60வீதத்திற்கு மேலானவர்கள் யாழ்குடாநாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் யாழ் குடாநாட்டில், தீவக பகுதியின் பாடசாலைகளில் தான் கூடுதலாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதேநேரத்தில் யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளதும் வடமாகாணகல்வித்துறையின் வெளிப்படையான இரகசியம் என்பதும் யாவரும் அறிந்த விடயங்கள்தான். இம் மேலதிக ஆசிரியர்களை கொண்டு தீவக ஆசிரியர் தேவைகளை நிரப்பமுடியும் என்பதுவும் சாத்தியமான தீர்வுகளில் ஒன்று ஆகும்.

நியாயமாக பார்த்தால் வன்னி பெருநிலப்பரப்பின் நான்கு மாவட்டங்களிலும்தீர்க்க முடியாத அளவிலேயே ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகின்றது.

உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர்கள் தேவைப்பாடு 128 ஆக இருக்க, சித்தியடைந்த பட்டதாரிகள் 41 என அறிவிக்கப்படுள்ளது. எனவே மீதமுள்ள வெற்றிடங்கள் வெளி மாவட்ட பட்டதாரிகளினால் நிரப்பபடவுள்ளது. இவ்வாறான நியமனதாரிகள் அதிகஸ்ட பிரதேச நியமனமாக தங்களை கருதுவதால்அவர்களினது எண்ணங்களும் செயற்பாடுகளும்

• ஐந்து வருடகாலத்தை ஓட்டுவதும்
• நியமனங்களை தக்கவைப்பதும்
• தங்கள் மேற்படிப்புகளை மேற்கொள்வற்கான கல்வி விடுமுறைகளை பயன்படுத்துவதும்

என முனைப்பாக செயற்படுத்தி, இறுதியில் வளம்குறைந்த பிரதேச மாணவர்களை இடைநடுவில் கைவிட்டுவிட்டு செல்வதுமாக இருக்கும்.

கஷ்டபிரதேசங்கள், இவ்வாறான ஆசிரியர் நியமனங்களினால் தொடர்ந்தும் கஷ்ட பிரதேசங்களாகவே வைத்திருப்பதிற்கான நடைமுறைகளை வடக்கு மாகாண கல்விதுறை கடைப்பிடிக்கின்றமை மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்திற்குரியதும் ஆகும். எனவேதான் நாம் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் மாவட்ட அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகளையும், ஆட்சேர்ப்புகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் வெற்றிடங்களிற் கேற்ப நெறிப்படுத்துமாறு வலியுறுத்திவருகின்றோம். இருந்தும் எந்தவித பயனும் ஏற்படுவதாக தெரியவில்லை.

அதேவேளை வன்னி பெருநிலபரப்பைச் சேர்ந்த பட்டதாரிகளின் அமைப்புகளும்கூட இவ்வாறான அடிப்படையான, அவசியமான நீண்டகால நன்மைகொண்ட விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உணரமுடியவில்லை.

எமக்கும் மக்களிற்கும் இவ்விடயத்தில் பல்வேறுபட்ட கேள்விகளும், சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது.

 இறுக்கமான பரீட்சை ஒன்றின் மூலம், வெட்டுப்புள்ளி முறையையும், மாவட்ட ஒதுக்கீடு முறைமையும் புறக்கணிக்கப்படுகின்றதா?
 அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளிற்குபரீட்சைகள் வைப்பதின் மூலம் தரம்பிரிக்கப்படுகின்றார்களா ?
 பரீட்சைக்கான கேள்விகள் தெரிவு செய்யப்பட்டதின் பின்னணி என்ன?
 தெரிவுபரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காக அவர்கள் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பாடத்திலும் பலவீனமானவர்கள் என்று கருதலாமா?
 சம்பந்தமான பாடத்தை விடுத்து, வேறு பாடத்தின் கேள்விகளை அதிகமாக்கி நடாத்தப்பட்டபரீட்சை சகல பரீட்சார்த்திகளிற்கும் நியாயமான பொறிமுறை என கருதலாமா?
 பட்டதாரிகளை உள்வாங்கும்பரீட்சையில் சித்தியடையவில்லை என்பது, பல்கலைக்கழக பட்டபடிப்பை கேள்விக்குள்ளாக்கவில்லையா?

மாவட்ட மட்டத்தில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், அனைவருக்கும் காலங்காலமாக மேற்கூறப்பட்ட சந்தேகங்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். எனவே

1. தேவைக்கு ஏற்ப அளவிலான பரீட்சார்த்திகள் பங்குபற்றுவதை உறுதிசெய்வதுடன், தேவையில்லாத மாவட்டங்களிற்கு பரீட்சைகளை தவிர்க்கப்படவேண்டும்.

2. தெரிவுப்பரீட்சைகளை மாவட்ட மட்டத்தில் நடத்தப்படல் வேண்டும்
இவற்றின் மூலம் ஐந்து வருடகால சேவை பற்றிய சுற்றுநிஷரூபத்தை மட்டுப்படுத்தவும், அதிகஷ்ட பிரதேசங்களை இல்லாமற் செய்யவும் முடியும். இது போன்ற விடயங்களில் நாம் பின்பற்றக்கூடிய இறுக்கமான நடைமுறைகளே வன்னி பெருநிலப்பரப்பின் நான்கு மாவட்டங்களின் கல்வியினை மேம்படுத்தும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.

தேசிய கல்வியியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்கபடும் போது கடைப்பிடிக்கப்படுகின்ற மாவட்ட வெற்றிடம் பற்றிய தரவுகளின் அடிப்படையிலான நடைமுறைகளை பாடசாலை ஆசிரியர் நியமனங்களிலும் கடைப்பிடிப்பதன் மூலம் நடைமுறை முரண்பாடுகளையும் தவிர்க்கமுடியும் என நம்புகின்றோம்.

கல்விச்சேவை என்பது மக்களிற்காகவும் மாணவர்களிற்காகவும் செயற்படுவதை விடுத்து, குறித்த பிரதேச ஆசிரியர்களை மையப்படுத்தியதாக அமையுமாயின், அது தரமான சேவையாக அமைய முடியாது. எனவே யுத்த வடுக்களில் இருந்து மீளுகின்ற சமுதாயத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி தரமான கல்வியை வழங்கும் நல்லெண்ண நோக்குடன் மேற்கூறிய கருத்துக்களையும் உள்வாங்கி செயற்படுமாறு சம்பந்தபட்டவர்களை மக்கள் பிரதிநிதியாக வினயமுடன் வேண்டுகின்றேன்.

மக்கள் சேவையில்,

க.சிவநேசன்
மாகாணசபை உறுப்பினர்
வடக்கு மாகாணசபை

பிரதிகள்:
• கௌரவ கல்வி அமைச்சர், வடக்கு மாகாணசபை
• செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணசபை