கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர். அதன்படி, நேற்று மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். அத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.
பல அரசியல்வாதிகள், அதிகாரிகளால் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.