ssssஇந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடா தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ.எம்.பசீர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடு மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயத்துக்காக விடுக்கப்பட்ட அழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த விஜயத்தின்போது வர்த்தக முதலீடுகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இருதரப்பு உறவுகளைப் பேண எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அரிசி அடுத்த மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தோனேசிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவுகளை மேம்படுத்தும் ஓரு நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்குமிடையிலுள்ள நெருங்கிய உறவை நினைவூட்டிய ஜனாதிபதி, 1976ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இந்தோனேசிய ஜனாதிபதி நல்கிய பங்களிப்பு தொடர்பிலும் விசேடமாக நினைவு கூர்ந்தார். இந்தோனேசிய தூதரக தலைமை அலுவலர் திவ்யட்மாஜி ஹெனமன்கிரஷி உள்ளிட்ட பிரதிநிதிகள் இச்சந்தி ப்பில் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.