sfdஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் உயர்மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இச் சந்திப்பில் சீனத் தூதுவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கலந்து கொண்டிருந்தனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு வழங்குவதற்கும், முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கும் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

நேற்றைய சந்திப்பின்போது இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பின் பின்னர், மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரையும் சீன உயர் மட்டக் குழுவினர் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.