கடந்த ஆட்சிக் காலத்தில் பயிற்சி அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்ட முறையினை இன்றைய ஆட்சியாளர்களும் கைக்கொண்டு, பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீதிகளில் உண்டு உறங்கி தமது நியாயமான கோரிக்கையினை விடுத்துவரும் வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைகள் தொடர்பில் உடனடியாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோன்று களுதாவளையில் சுடப்பட்டு படுகாயமடைந்த விமல்ராஜ் மீதான தாக்குதல் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளார். நல்லாட்சி மலர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் 2015ம் ஆண்டு தொடங்கி அரச அதிகாரிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள், நடத்தப்பட்டு வருகின்றன. 2015.08.02 அன்று பிரதம கணக்காளர் தேவகாந்தனின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத கும்பல் சென்று அவர் வீட்டி இல்லாததால் அவரது மனைவியையும் மைத்துனரையும் மிக மோசமாகத் தாக்கினார்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் எவருமே இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
26.05.2015 அன்று போரதீவுப்பற்று சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால் அக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கூட பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. அதன் பின்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தன்னுடைய கடமையை சரிவர செய்து கொண்டிருந்த ஒரு கிராம சேவகர்மீது மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது சம்பந்தமான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் கடமை புரிந்து வந்த ஒந்தாச்சிமடம் பகுதிக்குரிய கிராமசேவகர் எஸ்.விக்னேஸ்வரன் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். அக்கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவகர்களும் அரச ஊழியர்களும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அரச ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படுகின்ற போது ஏனைய அரச ஊழியர்களும் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடினார்கள். ஆனால் குற்றவாளிகள் யாரும் இனங்காணப்பட்டதாகவோ சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவரவில்லை.
சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்ற நபர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமையே இதற்கு காரணமாகும். இது குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெறுவதாக நாங்கள் அறிகிறோம். பொலிஸாரின் இந்த நடவடிக்கையினை நான் பாராட்டுகின்றேன். துப்பாக்கி சூட்டின் பின்புலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் நடாத்தி குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்களும் பீதியில் உள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் அதிகாரிகள் இன்று அச்ச நிலையில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்புகள், மண் அகழ்வுகள் உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், நேர்மையாக களத்தில் நின்று பணியாற்றும் அரச அதிகாரிகள் வீட்டை விட்டு தமது அலுவலகங்களுக்கு செல்ல அச்சம் தெரிவிக்கின்றனர். அலுவலகத்தில் இருந்து சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறும் இடத்திற்கு செல்ல அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த அச்சநிலை நீங்கவேண்டுமானால் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருடனும் அதன் செயலாளருடனும் பேசியுள்ளேன். அதுபோன்று இந்த பட்டதாரிகளுக்கு சுமுகமான தீர்வொன்றினை வழங்குமாறு கோரி பிரதமரிமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வேலையற்று இருந்த அனைத்து பட்டதாரிகளும் பயிற்சி அடிப்படையில் உள்ளீர்க்கப்பட்டனர். அதேபோன்று தான் உள்ளீர்ப்பினை இந்த அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.