maithriபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.

இலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இரண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். எனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.