viyalendran MPசிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்துடன் பேசுவதால் மாத்திரமே நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுள்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமானால் தமிழ் மக்களின் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒருமித்த கருத்தை கூறவேண்டும். தமிழ் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மனம்விட்டு பேசி தீர்க்கமான முடிவை எடுத்துக்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இரு தலைமைகளும் தனித்தனியே வேறு வேறு விடயங்களைப் பேசுவதனால் பெரும்பான்மைச் சமூகத்தினரிடமிருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மாறிமாறி வந்த அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்தது வரலாறு. காலத்துக்கு காலம் வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து அரசாங்கத்துடன் பேசிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் எமது மக்களுக்கு எந்தவித விமோசனமும் கிடைக்கவில்லை. இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் மற்றவர்களைப் போல் வெறுமனே பேசிவிட்டுப் போகாமல் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டிலே 44 ஊடகவியலாளர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களைக் கூட இந்த நல்லாட்சி அரசு விடுதலை செய்துள்ளது.

நல்லாட்சி அரசு வெறுமனே வெட்டிப் பேச்சுக்களால் காலத்தை வீணடிக்காமல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றார். (நன்றி வீரகேசரி 27.02.2017)