eeeஅமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவருடன், பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹாரிசின் மூத்த பட்டியல் அதிகாரி, சார்ஜன்ட் மேஜர் அன்ரனி ஸ்பாடரோ, அமெரி க்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் பணியக பணிப்பாளர் பிரிட்டானி பில்லிங்ஸ்லி ஆகியோரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள், நேற்று முள்ளிக்குளத்தில் நடந்த கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில், பங்கேற்றிருந்தனர். நேற்று இலங்கை கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்ற அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ உள்ளிட்ட அமெரிக்க படை அதிகாரிகள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தப் பேச்சுக்களில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பிரதி பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் இங்லிஷ், அமெரிக்க தூதரக கட ற்படை ஆலோசகர் லெப்.கொமாண்டர் பிரையன் பேஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவுக்கான எதிர்கால பயிற்சி மற்றும் நடவடிக்கை விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.