P1420488வேலைவாய்ப்பினை வழங்குமாறு அரசாங்கத்தைக் கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர். புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றையதினம் அவ்விடத்திற்கு சென்று பட்டதாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பான பிரதியொன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் அவர்களால் கையளிக்கப்பட்டது. இதன்போது இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையூடாக அரசாங்கத்தின் உரிய தரப்பினருக்கு எடுத்துக்கூறி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார். அவர்களின் மகஜர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
28.02.2017.
காலவரையறையற்ற போராட்டம் தொடர்பில் எமது நிலைப்பாடு-

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினராகிய நாம் கடந்த திங்கட்கிழமை காலை 9.00 மணியில் இருந்து எமது வேலைவாய்ப்புப் பற்றிய உரிமையினைப் பெற்றும் கொள்ளும் வகையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இரவு, பகலாக காலவரையறையற்ற போராட்டத்தினை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கமைய எமது கோரிக்கைகளாவன:

1. மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண ஆளுநர் மற்றும் வட மாகாண சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர் ஆகியோர் வடக்கிலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழிகள் வழங்கும் பட்சத்தில் (கால எல்லை தொடர்பில் திருப்தியான பதில் கிடைக்கப்பெற்றால்) எமது காலவரையறையற்ற போராட்டத்தினை நிறைவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

2. அடுத்து போட்டிப் பரீட்சை ஊடாக வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்பில் உள்ளீர்ப்பதைத் தவிர்த்து நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகைமையைப் பரிசீலித்து பட்டம் பெற்ற ஆண்டின் ஒழுங்கில் அனைத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவது தொடர்பிலும் உறுதிமொழி வழங்கப்பட வேண்டும்.

3. எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் இருந்து வருடந்தோறும் வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு அமைய துறைசார் பதவிகளில் அவர்களை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்குச் சட்டரீதியாக கொள்கைத் திட்டமிடலை அமுலுக்குக் கொண்டுவர வேண்டும்.

மேற்குறித்த உறுதிமொழிகள் வழங்கப்படும்வரை எமது காலவரையறையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும்.

வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்,
வடமாகாணம்.

P1420492 P1420493 P1420494 P1420495 P1420497 P1420500