sdfdகளுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின்மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பில், சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த சந்தேநபர்கள் போலியான கடவுச்சீட்டுகள் மூலமாக, நாட்டைவிட்டு தப்பியோட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதென கூறியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்ளுக்கு சந்தேகநபர்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை கண்காணிப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் விசேட கண்காணிப்பின்கீழ் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவல நீதவான் நீதிமன்றம் நோக்கி கடந்த 27ஆம் திகதி கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் ஐவரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் உயிரிழந்தனர். பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான சமயங் என அழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரணவும் மேற்படி தாக்குதல் சம்பவத்தின்போது உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.