இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணம் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூறியுள்ளது.
அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறை ஒன்று இல்லை என்றும் பேரவை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_சைனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் சயிட் அல் ஹ_சைன் இந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அது வரவேற்கப்பட வேண்டியது. புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் சாதகமான முனைப்பை வெளிப்படுத்தியுள்ளது. நல்லிணக்கம், அரசியலமைப்பு திருத்தம், இடம்பெயர்ந்தவர்களின் காணி மீளளிப்பு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற விடயங்களில் ஏற்றுக் கொள்ளக்கூடிய முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளது.
எனினும் இலங்கையில் உண்மையை நிலைநாட்டுவது மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்படுவதுடன், நீண்டகால சமாதானத்தை எட்டும் நோக்கில் கடந்தகால குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் முழு அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல. நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் போதும் செயற்படுத்தும் போதும் அவசரம் காட்டவில்லை. சரியான வழிமுறை ஒன்றை தெரிவு செய்யாவிட்டால் மிகக் கடினமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகள் அனைத்தும் வீணாகிவிடும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.