viyalendran MPஇலங்கைக்கு சர்வதேச சமூகம் மேலும் கால அவகாசத்தினை வழங்க கூடாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேசத்திடம் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கும் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கும் இடையிலான கரம் பெரும் சமர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
இந்த நாட்டில் யுத்தம் முடிந்து விட்டது. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம், ஆயுத கலாசாரம் இல்லையென சொல்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டில் வடக்கில் வாள்வெட்டு தாக்குதல்கள், கிழக்கில் துப்பாக்கி சூடு, தென்னிலங்கையில் துப்பாக்கிசூடு என மீண்டுமொரு ஆயுத கலாசாரம் தலையெடுக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சியின் பின்னர் அரச ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள், இந்தநிலையில், சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களை கடந்தும் நீதிமன்றில் ஒரு குற்றவாளிகள் கூட நிறுத்தப்படவில்லை. அதேபோன்று கடந்த மாதம் களுதாவளையில் வைத்து மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சுடப்பட்டார். அது தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தங்களை அர்ப்பணித்து பணியாற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல்களை நடாத்தும் சூத்திரதாரிகளை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தாவிட்டால் இவ்வாறான நாசகார ஆயுததாரிகள் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அஞ்சமாட்டார்கள். இந்த நல்லாட்சியில் சொல்லப்படும் விடயங்கள் வெறுமனே பேச்சளவில் இல்லாமல் செயற்பாட்டளவில் இருக்க வேண்டும். கிழக்கு மக்கள் மிகப் பெரும் தியாகங்களை செய்து இந்த நல்லாட்சியை கொண்டு வந்தனர். இன்று நல்லாட்சியை கொண்டுவந்த மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையேற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போராட்டங்களே நடந்து வருகின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் கால இழுத்தடிப்புகளை செய்யாமல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினை வழங்கவேண்டும். மக்கள் போராடித்தான், வீதிக்கு இறங்கித்தான் தமது நிலங்களையும் உரிமைகளையும் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் மக்களின் வாக்கு பலத்தினால் வந்த ஜனாதிபதியும் பிரதமரும் மக்கள் வீதிக்கிறங்காமல் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி யாழில் வைத்து பட்டதாரிகளின் பிரச்சினையை ஒரு நாளில் தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். ஒரு நாளில் தீர்வினை வேலையற்ற பட்டதாரிகள் கேட்கவில்லை. 44 வயதினையும் தாண்டி பல பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ளனர். இந்த நாட்டில் பல யுத்த குற்றங்கள் நடைபெற்றது. தமிழ் சமூகம் பல்வேறு வழிகளில் அழித்தொழிக்கப்பட்டது. இந்த சமூகத்திற்கு நீதியான நியாயமான தீர்வு வேண்டும் என்பதற்காக சர்வதேசம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூறலுடன் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுமாறு 18 மாத கால அவகாசத்தினை வழங்கியது.

இந்த காலப்பகுதியில் ஐ.நா.வின் தீர்மானத்தை இந்த அரசாங்கம் எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது. அரசுக்கு வழங்கிய காலக்கேடு இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்த அரசாங்கம் மீண்டும் கால நீடிப்பினை சர்வதேசத்திடம் கேட்டு நிற்கின்றது. அதனை நாங்கள் ஏற்க முடியாது.

அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசத்தினை வழங்கலாம் என சிலர் இன்று கூறலாம். இந்த அரசாங்கம் ஐ.நா.வின் தீர்மானத்தில் எத்தனை வீதத்தினை நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டும். 50 வீதமானவற்றை செய்திருந்தால் நாங்கள் பல மாதங்கள் அவகாசம் வழங்கலாம். ஆனால் ஐ.நா. வழங்கிய தீர்மானத்தில் 10 வீதம் கூட நிறைவேற்றப்பட்டிருக்குமா என்ற சந்தேகமே உள்ளது. மீண்டும் கால நீடிப்பு வழங்கும் போது அடுத்த தேர்தல் வந்துவிடும். 18 மாத கால அவகாசம் முடிந்துள்ளது. மீண்டும் சர்வதேசம் கால அவகாசத்தினை வழங்காமல் வழங்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுமாறு அழுத்தத்தினை வழங்க வேண்டும், என்றார்.