sfdfdவவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெடிவைத்தகல் கிராமம் 100 சதவீதம் தமிழ் மக்களுக்குரிய கிராமமாகும். இந்தக் கிராமத்தில், சிங்கள வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் கி.தேவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 221ஏ வெடிவைத்தகல், 221பி மருதோடை, 221 சி பட்டிக்குடியிருப்பு என்ற எல்லையோர கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்திருந்த நிலையில், தற்போது மீளக்குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், நிர்வாகச் செயற்பாடுகளை வெலி ஓயா பிரதேச செயலகத்துடன் மேற்கொண்டு வந்த சிங்கள மக்களில் 3,000 வாக்காளர்கள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறான, செயற்பாட்டின் மூலமாக சிங்கள மக்களே இல்லாத வவுனியா, வடக்கு பிரதேச சபையில் சிங்கள பிரதிநிதிகள் நால்வர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் ஏற்கெனவே, எல்லை நிர்ணயத்தை பிழையென ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நல்லாட்சி அரசாங்கம், மீளவும் எல்லை நிர்ணயத்தினை செய்யும் போது 221 ஏ வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவுக்குள் 2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 730 சிங்கள வாக்குகளை உள்வாங்கியுள்ளது. ஆனால், இந்தக் கிராம சேவகர் பிரிவில் சிங்கள மக்கள் இல்லாத முழுமையான தமிழ் கிராமமே வெடிவைத்தகல் கிராமமாகும்.

இதன் மூலமாக, வவுனியா வடக்கு பிரதேசசபையில், மேலும் இரண்டு சிங்கள பிரதிநிதிகள் உள்வாங்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனினும், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வாறான எல்லை நிர்ணயத்தினால் வவுனியா வடக்கு பிரதேச சபை சிங்கள மயமாகியுள்ளது என்பதுடன் பொரும்பான்மையின நிர்வாக கட்டமைப்புக்குள்ளும் செல்லும் அபாயமும் உள்ளது. எனவே, எமது அரசியல்வாதிகள் இந்நிலையை உணர்ந்து சாத்வீக ரீதியிலான போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.