ghfhவேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டதாரிகளின் தொழில் உரிமையினை உறுதிசெய், பட்டதாரிகள் பட்டம்பெற்றது வீதியில் சத்தியாக்கிரகம் செய்வதற்கா, நல்லாட்சி என்பது நஞ்சி ஊட்டும் ஆட்சியா, ஆட்சி மாற்றத்தினால் பட்டதாரிகளுக்கு கிடைத்து என்ன, நடுவீதியில் பட்டதாரிகள் மாளிகையில் அரசியல்வாதிகள் போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் பெருமளவான உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கினர். பல்வேறு எதிர்பார்ப்புடன் பல்வேறு கஸ்டங்களையும் தாங்கிக்கொண்டு பட்டத்தினை பூர்த்திசெய்யும்போது அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் வீதியில் போராட்டம் நடாத்துவது என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

இதற்கான பொறுப்புகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர். பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.