sivasakthi ananthanஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

“என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள்’ என்ற அலுவலகத்தை ஜனாதிபதி வடக்கில் திறந்து வைத்திருப்பதானது நொந்துபோயுள்ள மக்களை மேலும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். மாகாண சபையின் நிர்வாகம் அவசியமில்லை. அனைத்தையும் எம்மிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் எனக் கூறும் வகையிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் தான் நாங்கள் இந்தச் சட்டமூலம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்தச் சுமைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சாதாரண பொதுமக்களையே தான் பாதிப்பதாகவுள்ளது. ஆனால் தற்போது வரையில் அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமைகளை நன்கறிந்து கொண்ட நிலையிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தது. ஆனால் அவ்வாறான கொள்கைத் திட்டமொன்று ஆட்சியாளர்களிடத்தில் இல்லை என்றே தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயச் சந்தையிலும் கைத்தொழில் சந்தையிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சக்தி காணப்படுகின்றது.

குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்குரிய மானியங்கள், ஊக்குவிப்புகள் யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் முறையாக மக்களைச் சென்றடையாத நிலைமையே இருக்கின்றது. இந்த நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பல்வேறு ஏமாற்றங்களும் ஆறாத வடுக்களும் இன்று வரையில் இருக்கின்றன.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா முயலுகின்றது. இந்தக் கால அவகாசமே வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்ற நிலையில் தற்போது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், சட்ட வரைஞர்கள் ஆகியோர் நீதிக்கான விசாரணை பொறிமுறையில் பங்கேற்கத் தேவையில்லை என்பதை கால அவகாச தீர்மானத்தில் அல்லது அதற்கு மேலதிக தீர்மானமொன்றில் உட்புகுத்தி நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை அரசாங்கம் ஜெனீவாவில் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு சில வல்லாதிக்க சக்திகளும், சிவில் அமைப்புகளும் துணைபோவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச் சமுகம் சர்வதேசத்தையே தனது நீதிக்காக எதிர்பாத்திருக்கின்றது. அவ்வாறான நிலையில் தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைச் சிதறடித்து தமிழ் மக்களுக்குத் துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.