dddதமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், தூதரக அதிகாரி வீடு மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இளைஞர் பிரிஜ்ஜோ (21) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் இலங்கை தரப்பில் இருந்து இது மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீனவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக புலனாய்வு பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இலங்கை தொடர்பான அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் மற்றும் அதன் அருகே உள்ள தூதரக அதிகாரி வீடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம், எழும்பூர் கென்னத் சந்தில் உள்ள மகாபோதி ஆசிரமம் மற்றும் பௌத்த மடம், எழும்பூர் காஜா மேஜர் சாலையில் உள்ள இலங்கை வங்கி ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என, அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தொடர்பான ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.