sமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும், சமாதானத்திற்கும், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர்களுக்கு இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் குறித்த சங்கத்தின் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட 4பேரையும் தலா 20,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அனுமதியளித்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார். கடந்த 28ஆம் திகதி மேற்படி வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நின்ற பொலிஸாரையும் மாவட்டச் செயலக அதிகாரிகளையும் கடமையைச் செய்யவிடாது இவர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு கூறி நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் நீதிமான்றத்தில் இன்று ஆஜராகியபோது, இவர்களைப் பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார். மேலும், வேலையற்ற பட்டதாரிகள் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸார் தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கை நீதவான் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளார்.