மிக நீண்ட பெயர்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இலங்கையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி, தனது பெயரில் 14 பெயர்களைக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கமாக இடமாற்றங்களை அறிவிக்கும் பொலிஸ் அறிக்கையின் ஊடாக, இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஹக்மன திஸாநாயக்க வாசல பண்டார அமுனுகம விஜேரத்ன குணதிலக்க ரஞ்ஜநாயக்க பண்டாரலாகே ஹக்மன வலவ்வே அனுருந்த பண்டார ஹக்மன என்பதே அவருடைய பெயராகும். பொலிஸ் தலைமையகத் தகவல்களுக்கு அமைய ஹக்மன என்ற மேற்படி பொலிஸ் அத்தியட்சகர், கம்பளையில் இருந்து எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 150 வருட இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில், ஹக்மன என்ற தந்தையின் பெயருடன் சேர்த்து 13 பெயர்களுடன், உலகின் மிக நீண்ட பெயர் கொண்ட அதிகாரியாக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
28 பெயர்களைக் கொண்ட அதிகாரி ஒருவர், ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் என்ற மாநிலத்தில் வாழ்கின்றார். எனினும் அவர், இடையிடையே சில பெயர்களைச் சேர்த்திருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனினும், மேற்படி பொலிஸ் அத்தியட்சகரின் பெயர், அவரது பிறப்புச் சான்றிதழ்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.