qwerqweqகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது சொத்துக்களான காணிகள் மற்றும் குடியிருந்த வீடுகள் என்பனவற்றையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையக வாயில் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு தமது சொந்த நில விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று முதல் குறித்த கிராமத்தை சேர்ந்தச் இளைஞர் மற்றும் முதியவர் இணைந்து 2பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை படைத்தலைமையக வாயில் முன்பாக முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அதிலுள்ள வளங்கள் அனைத்தையும் தாம் அனுபவித்துக்கொண்டு வாழ்வதாகவும் தம்மை தமது சொந்தநிலங்களில் குடியமரவிடாது தமது கிராமத்துக்கு ஊடாக செல்லும் பிரதான வீதியை கூட மறித்து பாரிய கதவு ஒன்றினை அமைத்துள்ளனர். ஏனெனில் அந்த வீதியால் நாம் சென்றால் எமது சொந்த நிலங்களை பார்வையிட்டு விடுவோம் எமது வீடுகளுக்குள் சென்றுவிடுவோம் என்ற காரணத்தில் எம்மை அடந்த வீதியை கூட பாவிக்க விடுகின்றார்கள் இல்லை. நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் தானே எமக்கு எமது சொந்த உரிமை இல்லையா? எமது நிலங்கள் எமது கைகளில் வரும் வரும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். இன்றுமுதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் இரண்டு பேர் குதித்துள்ளோம்.

இது நாளடைவில் அதிகரிக்காது இருக்கவேண்டும் என்றால் எமது நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் எமக்கு நல்ல முடிவைத்தாருங்கள். அதுவரையில் பல்வேறு வடிவங்களில் எமது போராட்டம் தொடரும் என கேப்பாபுலவு பூர்வீக கிராம் மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாபுலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 480 ஏக்கருக்கு மேலான மக்களின் நிலங்களில் 10க்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.