sfd (2)தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தை முன்னெடுத்துவரும் கேப்பாப்புலவு மக்களை கண்காணிப்பதற்காக நவீன கமெரா ஒன்று இரகசியமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை, கோவில்கள், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும், இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்புலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பிலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை, போராட்டம் மூலம் மக்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிலையிலேயே கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக இராணுவத்தினர் ஒளிப்பதிவு செய்வதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில், தாம் வெளிப்படையாக மின்குமிழில் பொருத்திய கமெராவைக் கழற்றிவிட்டு தற்போது நவீன கமரா ஒன்றினை இரகசியமாகப் பொருத்தி, அந்த மக்களை ஒளிப்பதிவு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கூறுகின்றனர்.