இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும், மனித உரிமைகளையும் முன்னேற்றுவதற்கான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய வரைவுத் தீர்மானத்தின்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை, இலங்கைக்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மொன்டனீக்ரோ, மசிடோனிய குடியரசு, பெரிய பிரித்தானியா, வட அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரதான அனுசரணை வழங்கியுள்ள இந்த வரைவுத் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில், நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, 2015ஆம் ஆண்டில், இலங்கையின் இணை அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகளை வரவேற்றுள்ள அந்த வரைவு, மேலும் கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.இதன் நான்காவது கோரிக்கையில், இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான முன்னேற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டுமெனவும், 37ஆவது அமர்வில் இது குறித்த முன்னேற்றத்தின் எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பான கலந்துரையாடல்களின் பின்னர், அது குறித்த முழுமையான அறிக்கையை, 40ஆவது அமர்வில் (2019ஆம் ஆண்டு இடம்பெறும்) சமர்ப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஏனைய பரிந்துரைகளில், 30/1 தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இன்னொரு முக்கியமான பரிந்துரையில், சர்வதேச தலையீடு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இலங்கையில் மனித உரிமைகளையும், உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றை முன்னேற்றவும் பாதுகாப்பதற்கும், இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புகளும், அவர்களது ஆலோசனைகளையும் உதவிகளையும் பலப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் வரைவுத் தீர்மானத்தில், பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டத்தரணிகள், அங்கிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடருநர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோர், இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது. இம்முறை வாசகத்தில், அது, அழுத்தம் குறைந்ததாக, இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப் புதிய வரைவுத் தீர்மானம், எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.