northern_provincial_council1ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான பிரேரணை வடமாகாணசபையின் விசேட அமர்வில் கடுமையான வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான பிரேரணையை கடந்த 86ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் முன்மொழிந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் மேற்படி பிரேரணையை பரிசீலித்து 14ம் திகதி (இன்றைய தினம்) விசேட அமர்வு ஒன்றை நடத்தி ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்றைய தினம் மேற்படி பிரேரணை ஆராயப்பட்டபோது, சிவாஜிலிங்கம் தனது பிரேரணையில் உள்ள எதிர்காலத்தை சுட்டும் சொற்பதங்களை திருத்துவதற்கு கோரினார். இந்நிலையில் ஆளுங்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களும், எதிர்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களும் அதனை கடுமையாக எதிர்த்தனர்.

அதாவது சிவாஜிலிங்கம் முன்னர் முன்மொழிந்த பிரேரணை வேறு, தற்போது முன்மொழியும் பிரேரணை வேறு என வாதிட்டனர். அதே சமயம் திருத்தம் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும். என ஆளுங்கட்சியில் உள்ள மற்றொரு தரப்பு கோரியது.

இந்நிலையில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் வழங்கினார்.

திருத்தங்களின்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மற்றொரு அணியாகவும் நின்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மிக நீண்டநேரம் நடைபெற்ற கடுமையான வாக்குவாதத்தின் நிறைவில் 3 விடயங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

வடமாகாணசபையின் உறுப்பினர்களான ஜெயதிலக்க மற்றும் செனவிரட்ண ஆகியோர் மேற்படி பிரேரணையை தாம் எதிர்ப்பதாக அவை தலைவருக்கு கூறினர். மேலும் இந்த பிரேரணை இலங்கையையும், சிங்கள மக்களையும் பிரச்சினையில் சிக்கவைக்கும் பிரரேரணை எனவும் சிவஜிலிங்கம் ஒரு இனவாதி எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து இரு சிங்கள உறுப்பினர்கள் இதனை எதிர்ப்பதால் இந்த பிரேரணைக்கு தான் நடுநிலமை வகிப்பதாக எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறினார். எனினும் ஆளுங்கட்சியினரின் முழுமையான ஆதரவுடன் திருத்தங்கள் செய்யப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இன்று நிறைவேற்றப்பட்ட குறித்த பிரேரணை எதிர்வரும் வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.