fusballவவுனியா, யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட கழகத்தின் அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியமையால் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று  இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட அணித்தலைவர் இ.கார்த்திகேயன் (வயது 29) நகரில் இருந்து சென்ற போது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழு ஒன்றினால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த சங்கிலியும் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் தடை செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட அணி ஒன்றின் உறுப்பினர்களே மேற்படி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.