ஐ.நா மனித உரிமை சபை இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்விணாரதப் போராட்டத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இன்றுமதியம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர். இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை இலங்கை அரசுக்கு கால நீடிப்பை வழங்க வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட, இக் கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இது இவ்விதமிருக்க மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள், ஐ.நா. மனித உரிமை சபைக்கு பகிரங்க வேண்டுகோளை முன் வைக்கும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் இன்று துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஐ.நா மனித உரிமைகள் சபை இலங்கை அரசிற்கு கால நீடிப்பை வழங்க வேண்டாம் எனக்கோரியே கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை மன்னார் அரச பேரூந்து தரிப்பிட பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.