இராணுவத்தினர் வசமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கேப்பாபிலவு காணிகளில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தின் மூலம் அண்மையில் தமது பூர்வீக நிலங்களை மீட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே விடுவிக்கப்பட்ட சில காணிகளில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தினைத் தற்போது தோற்றுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த மக்கள் அண்மையில் தமது காணிகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும், இதனால் எதுவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடிவடிக்கைகளில் அப்பகுதிகளில் இருந்து மேலும் சில வெடிபொருட்கள் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அநேகமானவர்களின் காணிகளில் இவ்வாறான வெடிபொருட்கள் காணப்படுவதால், அவற்றை அகற்றி தாம் அச்சமின்றி வாழும் சூழ்நிலையினைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித்தர முன்வரவேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.