viyalendran (2)நல்லாட்சியிலும் தீய விடயங்கள் தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நாட்டைப் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக மாற்றுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். அவரின் போதையொழிப்பு அறிவிப்பு எல்லோராலும் வரவேற்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பு வாழைச்சேனையிலே மாபெரும் மதுபான உற்பத்திச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயமானது, நல்லாட்சியின்மீது தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 20 மதுபானசாலைகள் இருக்க அனுமதிக்கப்பட வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில், தற்போது 53 மதுபானசாலைகள் இயங்குகின்றன.

இங்கு வாழும் மக்கள் இந்த மதுபானசாலைகளைத் தடை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும் அதிகாரத் தரப்பு அதனையும் மீறி அனுமதி வழங்கியிருக்கின்றது. எனவே, சமூகத்தில் மீண்டும் போதை பழக்கத்தை உருவாக்குகின்ற இந்த நடவடிக்கையை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.