sfdதமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், 3ஆவது நாளாக இன்றும் தொடர்கின்ற போதும், கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த நேற்று முன்தினம் காலை ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், அமைதியான முறையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்துக்கு பலரும் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனினும், குறித்த மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் தொடர்ச்சியாகக் கடற்படையினர் செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்தல், வீதிக்கு முன்பாக வந்து மக்களைப் புகைப்படம் எடுத்தல், கடற்படை முகாம் நுழைவாயிலில் அதிகளவிலான கடற்படையினர் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை அவதானித்தல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகின்ற பிரதிநிதிகளைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் அவர்களின் விவரங்களைப் பதிவுசெய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், கடற்படையினர் எவ்வாறான அச்சரூத்தல்களைத் தமக்குக் கொடுத்தாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும், நிலம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராடும் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.