maithripalaரஷ்யாவு மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தொடர்ந்து உரையாற்றியுள்ள ஜனாதிபதி, தனது இந்த விஜயம் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் கொள்கையை தெளிவாக எடுத்துக் காட்டுவதோடு, சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தானும் தனது அரசாங்கமும் மேற்குலக நாடுகளுடன் மட்டும் உறவைப் பேணுவதாக சிலர் பல்வேறு விமர்சனங்களை செய்கின்றனர். அவ்வாறான அனைத்து விமர்சனங்களையும் தான் நிராகரிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, நடுநிலையான வெளியுறவு கொள்கையினால் அனைத்து உலக அரசுகளும் இன்று இலங்கையின் நட்பு நாடுகளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் முன்னோக்கி பயணிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த விஜயத்தில் ஏற்பட்டுள்ள இரு தரப்பு தொடர்புகள் மூலம் கிடைக்கும் பயன்கள் தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.