vigneswaranவடக்கில் மக்கள் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றபோதும் அந்தப் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கம் போதிய கரிசனை காட்டவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுவிஸ்நாட்டுத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்திருந்த இலங்கைக்கான சுவிஸ்நாட்டுத் தூதுக் குழவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது அலுவலகத்தில் நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே, முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு இங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கான சுவிஸ்நாட்டுத் தூதுக்குழுவினர், வட மாகாணத்துக்குப் பல தடவைகள் வந்திருக்கின்றனர். அப்போதெல்லாம் மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து செல்வது வழக்கம். அதேபோன்று வட மாகாணத்தின் தற்போதைய நிலையைப் பற்றித் தான் அறிந்து கொள்ள வந்தார்கள். இந்நிலையில், இச் சந்திப்பின்போதும் இங்குள்ள சில விடயங்களைக் கேட்டறிந்துள்ளார்கள். அதில் பல பலவிடயங்கள் அவருக்குத் தெரிந்திருந்தாலும் சில விடயங்கள் நான் எடுத்துக் கூறியதன் பின்னர் தான் தெரிந்து கொண்டுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மற்றும் நாயாற்றில் 250க்கும் மேலான பெரும்பான்மையின மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதற்கான படகுகளையும் கொண்டு வந்திருக்கின்றனர். இதனை சம்மந்தப்பட்ட அமைச்சருக்குத் தெரியப்படுத்தியதன் பின்னரும் அவ்வாறு தொழில் செய்வது தவறு. அந்த அமைச்சின் செயலாளர் அல்லது பணிப்பாளர் அதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் கேள்விப்படுகின்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே மேலும் மேலும் பிரச்சினைகளைத் தூண்டும் என்பதையும் எடுத்துக்காட்டினேன்.

அத்தோடு, கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியில் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதையும் அது சம்மந்தமாக அரசாங்கம் போதிய கரிசனை காட்டவில்லை என்பதையும் எடுத்துக் காட்டினேன். குறிப்பாக, மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற ஒரு உற்சாகம் அவர்களிடத்தே வந்திருக்கிறது. இதுவரைகாலமும் அவர்களை அடக்கி வைத்திருந்தார்கள். ஆனால், இப்பொழுது ஜனநாயக ரீதியான ஒரு சூழல் வந்த காரணத்தினால் தங்களுடைய உரிமைகளை அவர்கள் கேட்டு எடுத்துக் கொள்ளத் துணிகின்றார்கள்.

அது ஒரு நல்ல சமிக்ஞையாக இருந்தாலும் அரசாங்கம் அது பற்றிய போதுமான கரிசனையைக் காட்டாதது, எங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதுவும் 28, 29 நாட்கள் என போராட்டங்களைத் தொடர்ந்தும் நடத்திக் கொண்ட வருவது பற்றியயெல்லாம் எடுத்துக் கூறியிருந்தேன். இவை சம்மந்தமாக தாங்கள் அரசாங்கத்துடன் பேசுவதாக தூதுவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஏனைய மாகாண முதலமைச்சர்களுடனும் பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தார். ஏனெனில், வடக்கில் நடக்கின்ற விடயங்கள் ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு தெரியாது என்றும் இவை அவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் மக்களிடையே ஒரு விதமான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால், இரண்டு தரப்பினர்களும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர் விடுத்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.