இலங்கையில் மைத்திரி-– ரணில் ஆட்சியிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் மீளாய்வுக்கு பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தென்னாபிரிக்கா ஜொஹான்ஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் இலங்கையின் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதைச் சம்பவங்களை உள்ளடக்கிய இந்த ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் சபையின் மீள்பார் வைக்கு முன்வைத்துள்ளது. ஐ.நாவின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் காலத்துக்குக் காலம் காத்திரமான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மீளாய்வுச் செயற்பாட்டின் 28 ஆவது கூட்டம் இலங்கை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.