ssசட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிப்பிற்கு அமைய, யாழ்ப்பாண சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேர் நேற்று இரவு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் தாயகம் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊர்க்காவற்துறை பதில் நீதவான் சபேசன் முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக நடவடிக்கைகளுக்காக 30 மீனவர்களும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிப்பதற்கான ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பி.எஸ்.மிரண்டா குறிப்பிட்டார். இதனடிப்படையில், மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர்.