fireயாழ் அளவெட்டி மத்தியில் தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சிபெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அளவெட்டி மத்தியைச் சேர்ந்த குடும்பமொன்றின் ஒரே பெண் பிள்ளையான திருவிளங்கம் ஜெனனி என்ற 27 வயது யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்த தந்தை, இரவு உணவுப் பிரச்சினைக்காக மகளையும் மனைவியையும் தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இதனால் மனமுடைந்த மகள், ஒவ்வொரு நாளும் இவ்வாறு இன்னல்களை தாங்க முடியவில்லை என தாயிடம் கேட்டவாறு மண்ணெண்ணெயை எடுத்து தன்மேல் ஊற்றியுள்ளார்.

தாயின் முயற்சியால் தற்கொலை முயற்சியை மாற்றிக்கொண்ட குறித்த யுவதி குளிப்பதற்காக சென்றுள்ளார். அந்த இடத்துக்கு சென்ற குறித்த தந்தை, “நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த தாய் தீயில் பற்றி எரிந்த மகளை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்றையதினமே அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். மேற்படி யுவதியின் மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும்போது பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.