keppapilavuகேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று 33வது நாளாக தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென கேப்பாப்புலவில் 33வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ள போதிலும் 279 ஏக்கர் காணிகள் மே 15ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளதை நம்பி நாங்கள் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் விடுவிப்பதாக தெரிவித்துள்ள 279 ஏக்கர் காணிகளில் கேப்பாபுலவு மக்கள் குடியிருந்த வீடுகள் அடங்கிய நிலங்கள் எவையும் உள்ளடங்கவில்லை மாறாக வயல் நிலங்களும் ஏனைய பண்ணை காணிகளுமே உள்ளடங்குவதாகவும் தமக்கு முதற்கட்டமாக இராணுவ வசம் உள்ள தமது சொந்த வீடுவாசல்கள் அடங்கிய பிரதான வீதியோரம் அமைந்துள்ள தமது நிலங்களை விடுவிக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே விரைவில் சொந்த நிலத்துக்கு தம்மை குடியமர்த்துவதற்குரிய ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ள மக்கள் தாம் தமது காணிக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.