கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திருத்த வேலைகள் நெதர்லாந்து தொழில்நுட்பத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஓடுபாதைப் பகுதிகள் எல்.ஈ.டி. வகை விளக்குகளால் ஒளியமைப்புச் செய்யப்பட்டுள்ளதால், மிகக் குறைந்தளவு மின்சாரமே தேவைப்படும்.
இதன்மூலம் மின் கட்டணத்தின் சுமார் எண்பது சதவீதத்தைக் குறைக்கவும் முடியும். மேலும் எல்.ஈ.டி. இந்த விசேட விளக்குகளால், அசாதாரண காலநிலையில் கூட விமானங்களை பாதுகாப்பாகத் தரையிறக்க முடியும். புதிய ஓடுபாதையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கவுள்ளது எனவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.