er
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள், வட மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருந்து, காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர். இந்த விஜயத்தின் நிறைவாக இன்று வடமாகாண முதலமைச்சரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் நிலமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தனர். அதன்போதே முதலமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு குறித்துக் கூறிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எம்மால் முடிந்தவரை எமது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி வந்திருக்கின்றோம்.

அதற்குரிய நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும், மக்களுடைய உரிமைகளுக்காக போராடும் நிறுவனங்களும், அரசாங்கத்திற்கு போதியளவு நெருக்குதல்களைக் கொடுத்தால் மாத்திரமே மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், அரசாங்கம் அவற்றினை நடைமுறைப்படுத்துமெனவும் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.