graduateமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 08ஆம் மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் நடைபெறலாம், அரச கரும நடவடிக்கைகளுக்கு குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாக தெரிவத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த மாதம் மார்ச் 07ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் சமவுடமைகள் கட்சியின் உறுப்பினர்களான த.கிருபாகரன், டாக்டர் சி.குமாரகே ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 44 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.