viyalendranநாங்கள் தீர்வுத் திட்டத்தை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அதற்கு சமாந்திரமாக யுத்தத்தால் சீரழிந்து போன சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்களும் அபிவிருத்தி நோக்கி சமாந்திரமாக பயணிக்க வேண்டும்.

அபிவிருத்தி என்ற விடயத்திலே நாம் பின்தங்குவோமாக இருந்தால் நமது சமூக இருப்பென்பது கேள்விக்குறியாகி விடும்.
சமூகம் அழிந்த பின்னர் உரிமை கிடைத்து என்ன பிரயோசனம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உபதலைவர் சதாசிவம் வியாழேந்திரன் அவர் கேள்வி எழுப்பினார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் சனிக்கிழமை (08.03.2017) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன்,
எல்லைக் கிராமங்கள் பறிபோவதற்கு எங்களது செயற்பாடுகள்தான் காரணம்.
எமது வளமான பிரதேசங்களை கைவிட்டு நாம் நகரப் பகுதிக்கு வந்து விடுகின்றோம்.

அவ்வாறுதான் படுவான்கரைப் பிரதேசம் நம் கைகளிலிருந்து விடுபட்டப் போகும் நிலைக்கு வந்துள்ளது.
அது காலப் போக்கில் பெருமளவான நிலங்களை இழந்து விடவும். பின்னர் அந்த இடங்கள் பறிபோய் விடவும் கூடும்.
எத்தனை காலத்திற்குத்தான் நாமும் உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டு தெருவில் வந்திருந்து போராட முடியும், ?
எனவே, இருக்கும் நிலத்தையும் பறிகொடுத்து விடாமல் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு நாம் மீண்டும் செல்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

பெரியபுல்லுமலை, வெலிகாக்கண்டி, கொஸ்கொல்ல, கித்துள், பட்டிப்பளை, வடமுனை போன்ற எல்லைப் புறக்கிராமங்களில் இருந்து யுத்த காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து வந்ததால் அங்கு அவர்களுக்குச் சொந்தமாக இருந்த ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக் காணிகள் பறிபோயிருக்கின்றன.

இதேவேளை, பூர்வீகமாக நமது வாழ்விடங்களாக உள்ள காணிகளை நம்மவர்களே குறிப்பாக ஒரு சில தமிழ் அரச அதிகாரிகளே அபகரித்து கோடீஸ்வரர்களாகி இருக்கின்றார்கள்.

இவ்வாறு சவுக்கடி, மைலம்பாவெளி, ஆறுமுகத்தான்குடியிருப்பு போன்ற இடங்களில் தமிழ் அரச அதிகாரிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் காணிகளை அபகரித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ள விடயம்.
தாங்கள் தமிழ் மக்களின் பற்றாளர்கள் எனக் காட்டிக் காட்டிக் கொண்டு மக்களின் வரிப்பணத்திலே சம்பளம் பெற்றவர்கள் மக்களின் காணிகளை அபகரித்ததுதான் அவர்கள் செய்த சேவை. அதனால் மக்களுக்கு இப்பொழுது குடியிருப்பதற்கு காணிகள் இல்லை. இந்த விடயத்திலே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மக்களின் சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கின்ற சாராய உற்பத்தி போன்ற இன்னோரன்ன தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு மக்களின் காணிகளை அபகரிக்க இனிமேலும் அனுமதிக்கக் கூடாது.

நல்லாட்சியிலே மக்கள் நல்லதைத்தான் அனுபவிக்க வேண்டும்.
அதேவேளை, இந்த நல்லாட்சிலே தவறுகள் இடம்பெறும்போது அதனைப் பகிரங்கமாக சுட்டிக்காட்டவும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
ஆனால், சிலர் இந்த ஆட்சியைத் துரத்தியடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.

இந்தப் பாடசாலையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒரு தனி அலகு உருவாக்கப்பட்டு அது அவர்களை ‘எங்களால் முடியும்’ என்ற நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது ஏனைய பாடசாலைகளுக்கும் ஒரு முன்னுதாரணமான விடயம்.
பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் எங்களால் முடியும் என்ற ஒரு மன நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை எமது மனதில் எழும்போது எங்களாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வெருவரும் உணரமுடியும்.
இந்த நம்பிக்கையினை பின்ளைகளுக்கு சிறுபிராயத்தில் இருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமே சிறுவர்களை எதிர்கால சமூகததில் நல்ல பிரஜையாகவும் சிறந்த தலைவராகவும் சாதனையாளராகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
மாணவர்களிடையே பல்வேறு புறக்கிருத்திய செயற்பாடுகளின் மூலம் ஒற்றுமை, தலைமைத்துவப் பண்புகள் போன்றவை வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நல்ல வளமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார்