kuppaiஇலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.உள்ளூராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்லது வேறு பொருட்களை அப்புறப்படுத்துதல், சேகரித்தல், கொண்டு செல்லுதல், தற்காலிகமாக சேமித்து வைத்தல், பதப்படுத்தல், தனித்தனியாக வேறுபடுத்தி பிரித்தல் மற்றும் தொற்று நீக்குதல் போன்ற பணிகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ”இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நபர் அல்லது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அச்சுறுத்தல் விடுத்தல், இடையூறு ஏற்படுத்தல் போன்றவை குற்றமாக கருதப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

‘இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் சந்தேக நபரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடூழிய சிறைத் தண்டனை வழங்க முடியும்’ என்றும் ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொலன்னாவ மீதொட்டுமூல்ல குப்பைமேடு சரிந்த விபத்தின் பின்னர், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகர சபை நிர்வாகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

தற்காலிகமாக சமீபத்திய வேறு பிரதேசங்களிலுள்ள திண்ம கழிவு கையாளும் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்த போதிலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே கழிவுகளை அகற்றுதல் சேவையை அத்தியாவசிய சேவையாக கருதும் இந்த சிறப்பு கெஸட் அறிவிப்பு வெளியாகியுள்ளது.