இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. அரச பேருந்துகள் சில குறுகிய தூர சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் பயணிகளின்றி வெறுமனே ஓடியதாக தெரிவித்தனர். தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள் மூடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி
கடந்த 63 தினங்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அனுசரிக்கப்படும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களில் மாணவர்கள் வராததால் அரச மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன. அரச, தனியார் அலுவலகங்களிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தப்பட வேண்டும். அரச படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து காணாமல் போனவர்களின் உறவினரும், காணிகளின் உரிமையாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏற்பாட்டாளர்களினால் கடையடைப்பு மற்றும் ஹர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவைகளை பொறுத்தவரை ஆட்டோ சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அரச, தனியார் உள்ளுர் பேருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. தூர இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்), ஈ.பி.டி.பி, சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.